சீனாவில் உருவான கொரோனா வைரஸ், இன்று உலகையே உலுக்கி எடுத்து கொண்டு இருக்கிறது. இந்தத் வைரஸ் தொற்றால் இதுவரை உலகம் முழுவதும் 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். நாளுக்குநாள் அதிக அளவில் மக்களை கொரோனா கொலை செய்து வருகிறது. இந்த வைரசுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் இதன் தாக்கம் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது..
ஏழையாக இருந்தாலும் சரி, பணக்காரராக இருந்தாலும் சரி, பிரபலங்களாக இருந்தாலும் சரி யாரையும் கொரோனா விட்டுவைக்கவில்லை. கொரோனா வைரஸால் ஹாலிவுட் பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.சிலர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பிரபல நகைச்சுவை நடிகரான கென் ஷிமுரா, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு டோக்கியோவில் உள்ள மருத்துவமனையில் அவர், தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.
இதற்கிடையே இவருக்கு கொரோனா தொற்று மட்டுமின்றி நிமோனியா காய்ச்சலும் இருந்துள்ளது. இதன் காரணமாக இக்கட்டான சூழ்நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் யாரையெல்லாம் கொரோனா வேட்டையாட போகிறது என்பது தெரியவில்லை. ஆனால் விரைவில் இதற்கு மருந்து கண்டுபிடிக்கவேண்டும் என்பதே உலக மக்களின் ஆசை..