ஜவுளிக்கடை உரிமையாளர் வீட்டில் மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு மாதவி சாலையில் முகமது இப்ராஹிம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் ஜவுளி கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் பல் டாக்டராக இருக்கும் முகமது இப்ராஹிமின் மனைவி ஜெய்துல்லாவிற்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் முகமது இப்ராஹிம் தனது மாமியார் வீட்டில் மனைவியுடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் வழக்கம் போல இரவு நேரத்தில் முகமது இப்ராஹிம் வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார்.
இதனையடுத்து மறுநாள் காலை வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு இப்ராகிம் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 17 பவுன் தங்க நகை, 30 ஆயிரம் ரூபாய் பணம் போன்றவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இது குறித்து பெரம்பலூர் காவல் நிலையத்தில் முகமது இப்ராஹிம் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஜவுளி கடை உரிமையாளர் வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.