மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாள் வரும் பிப்ரவரி 24ஆம் தேதியன்று கொண்டாடப்படுகிறது. இது தொடர்பான அதிமுகவின் அம்மா பேரவை ஆலோசனைக்கூட்டம், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
அதிமுக அம்மா பேரவை மாநிலச் செயலாளரும், வருவாய்த் துறை அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு அம்மா பேரவை நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினர்.
அப்போது, அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் பேசியதாவது:
தன்னுடைய பிறந்தநாளன்று யாரும் தன்னுடைய இல்லம் வர வேண்டாம் என்றும், ஏழை எளியோர் இல்லங்களை நாடிச் சென்று அவர்களுக்கு உதவிகள் செய்திட வேண்டும் என்றும், இந்தியாவில் எந்தத் தலைவரும் சிந்திக்காதவற்றை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சிந்தித்து அன்புக்கட்டளையாக விடுத்துள்ளார். அந்த வகையில் ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ முகாம்கள், ரத்த தான முகாம்கள், மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்குதல் போன்றவற்றை கட்சியினர் செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
வாழ்நாள் முழுவதும் உடல்நலத்தையும் பொருட்படுத்தாமல் மக்களுக்காக உழைத்தவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா. அவருடைய பிறந்தநாளில் அனைத்து மாவட்டங்களிலும் ஏழை மக்களுக்கு, அம்மா பேரவை நிர்வாகிகள் உதவிகள் செய்திட வேண்டும். முதியோர், நோயாளிகள், மாணவர்களுக்கு அவரவர் வசதிகளுக்கு ஏற்ப உதவிகள் செய்திட வேண்டும். மேலும், அரசின் திட்டங்களை மக்களுக்கு புரியவைத்து அவற்றை மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டும். அம்மா பேரவை அதிமுகவின் இதயம் போன்றது, எனவே அனைத்து மக்களும் பாராட்டக்கூடிய அளவில் மறைந்த முதலமைச்சரின் பிறந்தநாள் விழாவை பேரவை நிர்வாகிகள் கொண்டாட வேண்டும் என்று இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்விடுத்தார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை இளைஞர் எழுச்சி நாளாகக் கடைப்பிடித்திடுவோம். அன்னதானம், ரத்த தானம், கண் தானம், உடல் உறுப்பு தானம் செய்யவும், இளைஞர்களுக்கு விளையாட்டுப் போட்டி, பெண்களுக்கு கோலப்போட்டிகள், ஏழை எளிய மக்களுக்கு இலவச திருமணங்கள் நடத்திட வேண்டும்.
சீன அதிபர் – பிரதமர் மோடி சந்திப்பு வெற்றிகரமான நடைபெற்றதற்கு உழைத்த அனைவருக்கும் நன்றி.
தமிழ்நாடு நாள் அறிவிக்கப்பட்டு சிறப்பாகக் கொண்டாடிய முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு நன்றி.
முதலமைச்சர் சிறப்பு குறை தீர்ப்புக் கூட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்துவதோடு, தமிழ்நாடு முழுவதும் கூடுதலாக ஐந்து லட்சம் முதியோருக்கு உதவித் தொகை தரப்படவும், முதியோர் சொத்து மதிப்பு உச்சவரம்பை ஒரு லட்சமாக உயர்த்தியதற்கு நன்றி.
பாசன திட்டங்களையும், தண்ணீர் தேவையை நிறைவேற்றவும் பணிகளை மேற்கொண்ட முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்களுக்கு நன்றி.
ஜல்லிக்கட்டை நடத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொண்ட முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்களுக்கு நன்றி.
ஐந்து புதிய மாவட்டங்கள், ஒன்பது புதிய மருத்துவக் கல்லூரிகள், சேலம் மாவட்டத்தில் கால்நடைப் பூங்கா, புதியக் கல்லூரிகள், ஆயிரத்து 600 கோடி ரூபாயில் அத்திக்கடவு-அவிநாசி திட்டம், 1000 ரொக்கத்துடன் பொங்கல் சிறப்புத் தொகுப்பு வழங்கிய முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்களுக்கு வாழ்த்து.
தொடர்ந்து பொய் பரப்புரையில் ஈடுபட்டுவரும் திமுகவிற்கு தொடர்ச்சியாகத் தோல்வியையே பதிலாக அளித்து அதிமுகவை கட்டிக்காத்துவரும் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்களுக்கு நன்றி.
அதிமுக அரசின் சாதனைகளைத் தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் கொண்டுசேர்க்கும்வகையில் சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் நடத்துவது.
விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக பெற்ற வெற்றி, ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அயராது உழைத்துப் பெற்ற வெற்றிகளைப் போல, எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக வெற்றிபெற உழைக்க வேண்டும்.