தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சி தொடங்குவதில் நடிகா் ரஜினிகாந்த் தீவிரம் காட்டி வருகிறாா். இன்று காலை சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து பேசினார் ரஜினிகாந்த். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்த அவர், கட்சிப் பதவியை தொழிலாக வைத்துள்ளனர், அது கேட்டது, மக்களுக்கு ரொம்ப கேட்டது என கூறியுள்ளார்.
ஆனால் நான் முதலமைச்சர் பதவியை ஒருபோதும் நினைத்து பார்த்தது கிடையாது, 1996ல் எனக்கு வந்த வாய்ப்பை நான் ஏற்கவில்லை. அரசியலுக்கு வருகிறேன் என 2017 டிசம்பருக்கு முன்பு நான் சொன்னதில்லை, 1996ல் இருந்தே அரசியலுக்கு வருவதாக நான் சொன்னதாக சொல்வது தவறு என அவர் விளக்கம் அளித்துள்ளார்.
நான் முதலமைச்சர் வேட்பாளர் இல்லை என்பதை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. தலைவன் சொல்வதை கேட்பவனே தொண்டன், என் முடிவை மாவட்ட செயலாளர்கள் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. இதை தான் ஏமாற்றம் என கூறினேன் என குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் நான் முதலமைச்சர் ஆகப்போவதில்லை என்பதை யாரும் தியாகம் செய்ததாக நினைக்கக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் இந்தியாவில் அரசியல் மாற்றம் என்று விரும்புகின்றனர் என கூறிய அவர், அரசியலில் தேவையானவர்களை மட்டுமே உடன் வைத்துக் கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும், நாட்டுக்கு நல்லது செய்ய விரும்புவோர் மட்டுமே தமது கட்சிக்கு வர வேண்டும் என்றும்கூறியுள்ளார்.
மேலும் கட்சிக்கு ஒரு தலைமை ஆட்சிக்கு ஒரு தலைமை என இரு தலைமை இருப்பது சிறப்பாக இருக்கும் என அவர் உறுதியளித்துள்ளார். அதுமட்டுமின்றி அசுர பலத்தோடு உள்ள 2 அரசியல் ஜாம்பவான்களை எதிர்த்து தேர்தலில் போட்டியிட வேண்டிய நிலை உள்ளது என அரசியல் வருகையை உறுதி செய்துள்ளார்.
ஆட்சியை கையில் வைத்துக் கொண்டு தேர்தலை எதிர்கொள்ளும் அதிமுக, ஆட்சிக்கு வரவேண்டிய நிர்பந்தத்தில் தேர்தலை எதிர்கொள்ளும் திமுக தலைவர் ஸ்டாலின், ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இல்லாத தேர்தல், இதுதான் வெற்றிடம், சரியான நேரம் என அதிரடியாக பேசியுள்ளார். இதனைதொடர்ந்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பேன் என கூறி தனது பேட்டியை நிறைவு செய்துள்ளார்.