இந்தியாவில் உள்ள சிறந்த பொறியியல் கல்லூரிகளில் படிப்பதற்கு வருடம் தோறும் JEE நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்கப்படும். இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள்தான் கல்லூரிகளில் சேர முடியும். இந்நிலையில் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் JEE நுழைவு தேர்வு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த தேர்வு தேசிய தேர்வு முகமையால் வருடத்திற்கு 2 முறை நடத்தப்படும் நிலையில், தேர்வு எழுதும் மாணவர்கள் ரெஜிஸ்டர் செய்திருக்க வேண்டும். அடுத்த வருடம் நடைபெற இருக்கும் JEE தேர்வுக்கான தேதி இம்மாதம் வெளியிடப்படும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது அது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி தேர்வுக்கு பதிவு செய்யும் நாள் நவம்பர் 3-ம் மாதத்தில் இருந்து தொடங்கும் எனவும், ஜனவரி மற்றும் ஏப்ரல் ஆகிய மாதங்களில் தேர்வு நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து JEE தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் 12-ம் வகுப்பில் 75 சதவீதத்திற்கும் மேல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆனால் எஸ்சி மற்றும் எஸ்டி மாணவர்கள் 65 சதவீதத்திற்கு மேல் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது.
கல்லூரியில் மாணவர்கள் தேர்வு செய்து படிக்க விரும்பும் பாடத்தை 12-ம் வகுப்பிலே தேர்வு செய்து படித்திருப்பதோடு, தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்வு எழுதுபவர்களுக்கு வயது வரம்பு எதுவும் கொடுக்கப்படவில்லை. மேலும் நுழைவுத் தேர்வு எழுதுவதற்கு ஒரு மாணவருக்கு 3 முறை மட்டுமே கால அவகாசம் கொடுக்கப்படும். அதற்கு மேல் முயற்சி செய்பவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி தரப்பட மாட்டாது என்று கூறப்பட்டுள்ளது.