ஜீப் நிறுவனம் ராங்லர் எஸ்யூவி என்ற புதிய மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது .
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல மாடலான ராங்லர் மாடலின் நான்காம் தலைமுறை அறிமுகமாகியுள்ளது . இந்த ராங்லர் மாடலானது லாஸ் ஏஞ்சல்ஸ் ஆட்டோமொபைல் கண்காட்சியில் 2017-ல் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்தியாவில் இந்த புதிய ஜீப் ராங்லர் விலை ரூ. 63.94 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக ஐந்து கதவுகளைக் கொண்டும், கம்பீரமான தோற்றத்துடனும் , சாலை மற்றும் சாகச பயணத்துக்கேற்ற இது தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஜீப் ராங்லரானது சகாரா மாடலின் வடிவமைப்பைக் கொண்டுள்ளது.மேலும் , இதன் முகப்பு தோற்றம் ஜீப் சி.ஜே. 15 மாடலைப் போன்று உள்ளது. இதன் பின்புறத்தில் விளக்குகள் நேர்த்தியாக, தொலைவிலிருந்து பார்த்தாலும் மிகச் சிறப்பாக ஒளிரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் உள்ள ஸ்டெப்னி டயரால் எந்த வகையிலும் விளக்கு வெளிச்சம் பாதிக்கப்படாத வகையில் வாகனத்தின் பின்பகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக உள்புறத்திலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில் 8.4 அங்குல இன்போடெயின்மென்ட் திரையும் , டூயல் சோன் கிளைமேட் கண்ட்ரோல் வசதியும் கொண்டுள்ளது. இதோடு, பின் இருக்கை பயணிகளுக்கேற்ப பின் பகுதியில் ஏ.சி. வென்ட் உள்ளது. மேலும் அனைத்து பயணிகளும் சவுகரியமாக பயணிக்கும் வகையில் அதிக இட வசதி கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதனோடு, ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்யும் வகையில் 12 வோல்ட் யு.எஸ்.பி. போர்ட் இதில் உள்ளன. மேலும் ஜீப் ராங்கலர் மாடலில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட இன்-லைன் 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கபப்ட்டுள்ளது. இந்த என்ஜின் 268 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 400 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதோடு 8-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷனையும் வழங்குகிறது.