கே.டி.குஞ்சுமோன் தயாரிப்பில் “ஜென்டில்மேன் 2” படத்தில் ஹீரோவாக சேதம் சீனு நடிக்க உள்ளார்.
தமிழ் படங்களை கேரளாவில் விநியோகம் செய்தவர் கே.டி. குஞ்சுமோன். பின்னர் இவர் தயாரிப்பாளராக மாறியுள்ளார். இவர் இயக்கிய வசந்தகால பறவைகள், சூரியன் போன்ற படங்களின் வெற்றிகளை தொடர்ந்து கடந்த 1993-ல் பிரம்மாண்டமாக அவர் தயாரித்த படம் ஜென்டில்மேன். இந்தப் படம் ஷங்கரை டைரக்டராக அறிமுகப்படுத்தியது. இதனை அடுத்து பல வெற்றிப் படங்களையும் தயாரித்துள்ளார். ஜென்டில்மேன் படம் மிகப்பெரிய ஹிட்டான நிலையில் அதன் இரண்டாம் பாகத்தை தான் தயாரிக்கவுள்ளதாக குஞ்சுமோன் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தியில் இப்படத்தை எடுத்துள்ளதாகவும் அதற்காக ஜென்டில்மேன் பிலிம் இன்டர்நேஷனல் எனும் பெயரில் புதிய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். பின்னர் அவ்வப்போது “ஜென்டில்மேன் 2” படம் குறித்த அப்டேட்டை கே.டி.குஞ்சுமோன் வெளியிட்டு வந்துள்ளார். அந்த வகையில் “ஆஹா கல்யாணம்” படத்தை இயக்கிய கோகுல் கிருஷ்ணா இப்படத்தை இயக்கவுள்ளதாகவும் பாகுபலி, ஆர்ஆர்ஆர் படத்திற்கு இசையமைத்தை எம்.எம்.கீரவாணி இசையமைக்க உள்ளதாகவும் அறிவித்திருந்தார்.
பின்னர் இந்த படத்தில் நயன்தாரா, சக்கரவர்த்தி, பிரியா லால் நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் கதாநாயகன் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தின் லீட் ரோலில் சேதன் சீனு நடிக்கின்றார். தெலுங்கு படங்களில் முன்னணி கதாநாயகனாக வளர்ந்து வரும் சேதன் சீனு தற்போது காவேரி கல்யாணி இயக்கும் படத்தில் 12 மாறுபட்ட வேடங்களில் நடித்து வருகின்றார். மேலும் தமிழிலும், தெலுங்கிலும் வெளியாகும் தடா மற்றும் பெயர் சூட்டப்படாத வேறு இரண்டு படங்களிலும் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.