ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் துணை சி.இ.ஓ அமித் அகர்வால் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
விமான போக்குவரத்து துறையில் தனியார் நிறுவனங்கள் இறங்கிய பின்னர் தொழில் போட்டி மனப்பான்மையில் பயணிகளுக்கு ஆதரவாக சில நிறுவனங்கள் பயண கட்டணங்களை குறைத்தும், சிறப்பு சலுகைகள் அறிவித்தும் வாடிக்கையாளர்களை கவர்ந்தன. புதிதாக தனியார் நிறுவனங்கள் பல தொழில் போட்டியில் இறங்கியுள்ளதால் கிங் பிஷர் உள்ளிட்ட சில நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்தது. அந்த வரிசையில் ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனமும் நின்று, கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.
இந்நெருக்கடியின் காரணமாக போதிய பணப்புழக்கம் இல்லாததால் அந்நிறுவனத்தின் பணிபுரியும் விமானிகள், பொறியாளர்கள் மற்றும் பணிப்பெண்களுக்கான மாத சம்பளத்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் குறிப்பிட்ட தேதியில் வழங்காமல் நிர்வாகம் இழுத்தடித்து வருகிறது. இந்த பிரச்சனையால் ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம், தன்னிடமுள்ள அனைத்து விமான சேவைகளையும் ரத்து செய்துள்ளது.
இந்நிலையில், ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் துணை சிஇஓ அமித் அகர்வால் இன்று திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நான் பதவியை ராஜினாமா செய்தது தனது சொந்த காரணங்களுக்காக என்று குறிப்பிட்டுள்ளார்.