பாரத் நெட் டெண்டர் ரத்து குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார்.
கிராமங்களில் அதிவேக இணையதள வசதி ஏற்படுத்துவதற்கான பாரத் நெட் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் TANFINET என்ற பெயரில் சுமார் 2,000 கோடி ரூபாயில் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில், இந்த டெண்டரை ரத்து செய்து மத்திய வர்த்தக அமைச்சகம் உத்தரவிட்டது. குறைகளை கலைந்த பிறகும் மறு டெண்டர் விடவும் பரிந்துரைத்துள்ளது. இதற்கு முதலமைச்சர் விளக்கமளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் கூறியிருக்கிறார்
செயின்ட் ஜார்ஜ் கோட்டை ஊழல் டெல்லி செங்கோட்டை வரை சந்தி சிரிக்கின்றது என்ற தலைப்பில் திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை விட்டுள்ளார். அதில், பரபட்சமாக வேண்டிய சில நபர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் வகையில் 2000 கோடி ரூபாய் பாரத் நெட் டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என்று அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் அடிப்படையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற விசாரணையில் மத்திய அரசு நேற்றைய தினம் டெண்டரை ரத்து செய்து உத்தரவிட்டு இருக்கிறது.
திமுகவும் ஏற்கனவே இது சம்பந்தமான வழக்கு போட்ட போது, அப்போது தமிழக அரசின் லஞ்ச ஒழிப்பு துறை ”முகாந்திரம் இல்லை” என்று இந்த வழக்கை முடித்து வைத்தார்கள். அப்போ நாங்க ஏற்கனவே சொல்லி இருந்தோம். இன்றைக்கு குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள். வெட்கி தலைகுனிய வேண்டிய வர்கள் மீண்டும், மீண்டும் பொய் சொல்லி பொதுமக்களை ஏமாற்றலாம் என வீண் முயற்சியில் ஈடுபடுவதாகவும் சொல்லியுள்ளார்,
டெண்டரையே மத்திய அரசு ரத்து செய்து இருப்பதால், இதில் ஊழல் இல்லை, முறைகேடு இல்லை, மத்திய அரசு பாரத் நெட் டெண்டர் ஒப்பந்த புள்ளிகளுக்கு தடை விதிக்கவில்லை என்று பச்சை பொய் சொன்ன அமைச்சர் ராஜினாமா செய்வாரா ? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
முறைகேடாக டெண்டர் விட்ட அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை ? முகாந்திரம் இல்லை என்று வக்காலத்து வாங்கிய லஞ்ச ஊழல் தடுப்பு அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை ? இதற்கெல்லாம் முதலமைச்சர் தகுந்த விளக்கத்தை தமிழக மக்களுக்கு வழங்க வேண்டும் என்று முக.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.