இயற்கையின் வரமாக திகழ்ந்த சாண எரிவாயு உற்பத்தி காலத்தால் புறக்கணிக்கபட்டதால் எல்.பி.ஜி. சிலிண்டர் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.
இந்தியாவில் கேஸ் சிலிண்டர்கள் இல்லாத வீடுகளே இல்லை என சொல்லலாம். அந்த அளவு அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாக இவை மாறிவிட்டன. ஆனால் நாள்தோறும் அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் விலையால் கேஸ் சிலிண்டர்களின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து, ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்தினரை கவலையில் ஆல்தி வருகிறது. தற்போது நாம் பயன்படுத்தும் சிலிண்டர்களுக்கு மானியம் வழங்கப்பட்ட வரை இதன் விலை ஓரளவு கட்டுப்பாட்டில் இருந்தது.
ஆனால் மானியம் ரத்து செய்யபட்டதன் விளைவு வீட்டு உபயோக சிலிண்டர் விலை 650 ரூபாய்க்கு மேலே எகிறி உள்ளது. விலைவாசியை பற்றி கவலைப்படுவதை விட அதை எப்படி சமாளிப்பது என்பதே புத்திசாலித்தனம். அதன்படி கேஸ் சிலிண்டர் பிரச்சனையை கால்நடைகளை கொண்டு தீர்க்க முடியும் எனக் கூறுகின்றார் விவசாயி சத்தியமூர்த்தி. 90களில் பெரும்பாலான கிராமங்களில் சாண எரிவாயு கலன்கள் பயன்பாட்டில் இருந்தன.
ஆனால் அப்போது அறிமுகமான எல்பிஜி சிலிண்டர்கலால் இவற்றை மெல்ல புறக்கணிக்க தொடங்கினார்கள் பொதுமக்கள். விளைவு திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் இதுபோல சுமார் 35 ஆயிரம் சாண எரிவாயு கலன்கள் காலத்தால் காணாமல் போயின. இவை தற்போது மீண்டு வர வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் ஆகியுள்ளது. மாடு வளர்ப்பில் பெரும்பாலான விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கவில்லை என்றாலும் அதன் கழிவுகளை பல வகைகளில் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
பெரிய அளவிலான இரும்பு களம் ஒன்றில் மாடு மற்றும் ஆட்டின் சாணத்தை கொட்டி சமன் அளவு தண்ணீரை ஊற்ற வேண்டும். இந்த கரைசலில் உள்ள பாக்டீரியாக்களின் வேதிவினையால் இரும்பு கலனில் இயற்கை எரிவாயு படிப்படியாக உற்பத்தியாகும். இரண்டு வாரத்தில் கலனில் இருந்து வெளியேறும் எரிவாயு குழாய் மூலம் அடுப்பை அடையும். இதுதான் கேஸ் சிலிண்டருக்கான சிறந்த மாற்று.
சாண எரிவாயு கலனில் இருந்து மின்சாரம் தயாரிப்பதோடு, விவசாயத்திற்காக உரமும் தயாரித்துக் கொள்ள முடியும். எனவே மக்கள் மனங்களிலிருந்து மறக்கடிக்கப்பட்ட இயற்கை எரிவாயு உற்பத்தி முறைக்கு அரசே மீண்டும் புத்துயிர் ஊட்ட வேண்டும். எனவே மத்திய மாநில அரசுகள் 100 விழுக்காடு மானியத்தில் கிராமங்கள் தோறும் நவீன சாண எரிவாயு கலன் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் வலுத்து வருகின்றன.