மருத்துவர் போல் நடித்து ஒருவர் நகை கடை உரிமையாளரை ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள வேளச்சேரி பகுதியில் நகைக்கடை உரிமையாளரான சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சக்திவேலின் கடைக்கு மர்ம நபர் ஒருவர் சென்றுள்ளார். அவர் தனது பெயர் சஞ்சய் எனவும், தான் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மகப்பேறு டாக்டராக வேலை பார்த்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அந்த நபர் தனது மனைவிக்கு நகை ஒன்றை வாங்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அதன் பிறகு அந்த மர்ம நபர் தான் தேர்வு செய்யும் நகையை மருத்துவமனைக்கு கொண்டு வாருங்கள் எனவும், அங்கே வைத்து அதற்குரிய பணத்தை கொடுக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.
இதனை உண்மை என்று நம்பிய சக்திவேல் அந்த நபர் தேர்வு செய்த நகையுடன் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அதன்பிறகு அந்த 7 பவுன் நகையை செல்போனில் படம் பிடித்து தனது மனைவிக்கு அனுப்ப வேண்டும் என்று கூறிய அந்த மர்ம நபர் நைசாக அங்கிருந்து தப்பித்து விட்டார். இதனை அடுத்து நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பி வராததால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து சக்திவேல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.