பூட்டியிருந்த வீட்டில் மர்மநபர்கள் 51 பவுன் தங்கநகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உடையாம்பாளையம் பகுதியில் அருணாச்சலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் துணிக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் அருணாச்சலம் தனது குடும்பத்தோடு வால்பாறைக்கு சென்றுவிட்டார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அருணாச்சலம் அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன்பின் உள்ளே சென்று பார்த்த போது 2 பீரோக்களில் வைக்கப்பட்டிருந்த 17 லட்சத்திற்கும் மேலான மதிப்பு கொண்ட 51 பவுன் தங்கநகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச்சென்றது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து அருணாச்சலம் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மற்றும் கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவான தடயங்களை சேகரித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காமிராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.