நகைக்கடனுதவி திடீரென்று நிறுத்தப்பட்டதாக தகவல் வந்ததால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்குவது நிறுத்திவைக்கபட்டிருக்கிறது. நகைக்கடன்களை நிறுத்தம் செய்யுமாறு கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் மூலம் தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்க இணை பதிவாளர் அனைத்து மாவட்ட மற்றும் மண்டல இணை பதிவாளர்களுக்கு செல்போன் மூலம் நேற்று குறுந்தகவல் ஒன்றினை அனுப்பி இருக்கிறார். அதில் அனைத்து கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் கொடுப்பதை உடனடியாக நிறுத்தி வைக்குமாறு அவர் ஆணை வழங்கியுள்ளார்.
அதன்படி, தமிழகத்தில் மாநில தலைமை கூட்டுறவு வங்கி, 23 மத்திய கூட்டுறவு வங்கிகள், 128 நகர கூட்டுறவு வங்கிகள், 4250 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் போன்ற அனைத்து அமைப்புகளிலும் இன்று முதல் நகைக்கடன் வழங்கப்படுவது தடைசெய்யபட்டுள்ளது. இந்த திடீர் அறிவிப்புக்கு அரசு எந்த வித காரணமும் கூறவில்லை. ஆனால் நகைக்கடன் வழங்குவதை நிறுத்துமாறு மட்டுமே உத்தரவு வழங்கியுள்ளது. இதையடுத்து அனைத்து கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களில் நகைக்கடன் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் நகரங்களை விட கிராமங்களில் உள்ள ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று கூட்டுறவு வங்கி மற்றும் சங்கத்துக்கு நகைக்கடன் பெற வந்த ஏராளமானோர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர். மேலும் சிலர் வங்கி ஊழியரிடம் திடீரென கடனுதவி நிறுத்திய காரணத்தை கேட்டு வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதுபோன்ற நடவடிக்கைகள் தங்களுக்கு பெரும் இடையூரை ஏற்படுத்துவதாக கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சங்கம் கூறியுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெறுவது நிறுத்தப்பட்டதால் தமிழகம் முழுவதும் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா தொற்றின் காரணமாக பலர் வேலை இல்லாமல் வருமானம் இன்றி தவிக்கின்ற நிலையில் பலரும் நகைகளை அடகு வைத்தே அன்றாட செலவை சமாளித்து வருகின்றார்கள். தற்போது எந்த காரணமும் இல்லாமல் நகைக்கடன் நிறுத்தப்பட்டுள்ளதால் தனியார் அடகு கடைகளை மக்கள் தேடி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.