Categories
அரசியல்

எம்ஜிஆர் பேசியதால் தா அந்த எழுத்திற்கு மதிப்பு…. வரலாற்றை மாற்றாதீங்க… கொந்தளித்த ஜெயக்குமார்….!!!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் எம்ஜிஆர் குறித்து உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிடுவதாக தி.மு.க அரசை கண்டித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இது பற்றி இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், தமிழ்நாடு அரசு, 16-1-2022-ஆம் தேதி, செய்தி வெளியீட்டு எண் 111-ல் வெளியிட்டிருக்கும் செய்தியில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் குறித்து உண்மைக்கு புறம்பான பல்வேறு தகவல்களை வெளியிட்டதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன்.

தன்கட்சி வரலாறு மற்றும் தமிழ்நாடு அரசியல் வரலாறு பற்றி அறியாத ஒருவரை முதலமைச்சராக பெற்றிருப்பது தமிழ்நாட்டின் தலையெழுத்து என்று தான் கருதுகிறேன். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, தன்னை திமுகவின் தலைவர் மற்றும் முதலமைச்சராக மாற்றிய கட்சி பொருளாளர் எம்.ஜி.ஆர் கணக்கு கேட்டதற்காக அவரை கட்சியிலிருந்து  நீக்கினார்.

அவரின் வாரிசுகள் பொய் மற்றும் புனைசுருட்டு போன்றவற்றை மூலதனமாக்கி அரசியல் செய்வது வினோதம் கிடையாது. தி.மு.க அரசு வெளியிட்ட செய்தியில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திரைக்கதை மற்றும் வசனத்தில் வெளியான, “மந்திரிகுமாரி” மற்றும் “மருதநாட்டு இளவரசி” மூலமாக தனக்கென்று தனி இடம் பிடித்தார் எம்ஜிஆர் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஆனால், திரையுலகில் நுழைய முடியாமல், திரைத்துறையே வேண்டாமென்று கோவையிலிருந்து தன் சொந்த ஊர் திருக்குவளைக்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சென்றார் என்பது தான் வரலாறு. எம்ஜிஆர் இதனை அறிந்து, கருணாநிதிக்கு கடிதம் அனுப்பி, அவரை கோவைக்கு வருமாறு கூறி, “மருதநாட்டு இளவரசி” திரைப்படத்திற்கு வசனம் எழுதுவதற்கு வாய்ப்பளித்தார் என்பது தான் வரலாறு.

எங்களின் எம்ஜிஆர் மற்றும் அவரின் சகோதரர் நடிகர் திலகம் இருவரின் படங்களிலும்  உச்சரிக்கப்பட்டதால் தான் கருணாநிதியின் எழுத்துக்களுக்கு மதிப்பு கிடைத்தது என்பது தான் வரலாறு. திரையுலகில் உள்ள பலருக்கும் இந்த உண்மை தெரியும் என்று குறிப்பிட்டிருக்கிறார். இனிமேலாவது, தி.மு.க அரசாங்கத்தின் சார்பில் வெளியாகும் செய்திகளில் வரலாற்றை மாற்றாமல் வெளியிடப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். “எம்ஜிஆர் குறித்த வரலாற்றை மாற்றி தவறான செய்தியை வெளியிட்ட தி.மு.க அரசிற்கு என் கடும் கண்டனங்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Categories

Tech |