தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரண விவகாரம் குறித்து தமிழக சட்டசபையில் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி உயிரிழந்ததாக வெளியான தகவல் பொய் என்றும் அவர் டிசம்பர் 4ஆம் தேதி இறந்து விட்டார் என்பது தெரிய வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று சிகிச்சைகள் அளிக்க தேவை இல்லை என்றும் சென்னையில் சிகிச்சை வழங்கினால் போதும் என்று சசிகலா கூறியதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த முடிவுகளை சசிகலா குடும்பத்தினரை எடுத்தனர் என்று அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும் சசிகலா, கே.எஸ். சிவகுமார், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகிய 4 பேர் ஜெயலலிதா மரணம் குறித்து குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து விசாரணைக்கு ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கை தீர்ப்பு அல்ல, அது ஒரு பரிந்துரை. எம்.ஜி.ஆர்க்கு உடல்நிலை சரியில்லாத போது அவர் சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி மருத்துவ வசதியுடன் கூடிய விமானத்தை ஏற்பாடு செய்தார். இதனால் தான் எம்ஜிஆர் உயிர் பிழைத்தார். அதனைப் போலவே ஜெயலலிதா விவகாரத்திலும் பிரதமரோ அல்லது மாநில அரசில் இருந்து அமைச்சர்கள் ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். மோடி செயல்பட்டு இருந்தால் முன்னாள் முதலமைச்சர் உயிருடன் இருந்திருக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். இவரின் இந்த அறிக்கை தமிழக அரசியல் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.