தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஜனவரி 27-ஆம் தேதி ஜெயலலிதாவின் நினைவிடத்தை திறந்து வைக்க உள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டார். அவரின் உடலானது எம்.ஜி.ஆர் சமாதி அருகில் மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டதை அடுத்து, தமிழக அரசு ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைக்க முடிவு செய்தது. இந்த நினைவிடமானது பீனிக்ஸ் பறவை போன்ற வித்தியாசமான தோற்றத்தில் வடிவமைக்கப்பட திட்டமிடப்பட்டது. இதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 8ஆம் தேதி அடிக்கல் நாட்டினார்.
இதனையடுத்து இத்தாலி மார்பிள் மற்றும் பளிங்கு கற்கள் ஆகியவை பதிக்கப்பட்டு சுமார் 50 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் இந்த நினைவிடமானது பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டது. அதன்பின் இந்த நினைவிடத்தை திறந்து வைப்பதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வரும் 27ஆம் தேதி ஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைக்கப் போகிறார். இந்த விழாவில் அ.தி.மு.கவில் உள்ள முக்கிய தலைவர்கள் மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் போன்றோர் பங்கேற்கின்றனர். மேலும் பிரதமர் நரேந்திர மோடி இந்த ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழாவில் பங்கேற்க போகிறாரா என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.