அரியலூரில் திடீரென இடியுடன் கூடிய பெய்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே அக்னி நட்சத்திரம் ஆரம்பித்ததால் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதோடு அனல் காற்றும் வீசி வருகின்றது. இதனால் பொதுமக்கள் யாரும் வெளியே செல்ல முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்தாலும் அது சில நேரத்திற்கு மட்டுமே குளிர்ச்சியை தருகிறது.
இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயக்கொண்டான் பகுதியில் திடீரென இடி மின்னலுடன் கூடிய கனமழை பொழிய ஆரம்பித்தது. இதனால் அப்பகுதியில் உள்ள சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இவ்வாறு திடீரென பெய்த மழையால் வெப்பம் குறைந்து சில்லென்று காற்று வீசி குளிர்ச்சியான சூழல் உருவானதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.