ஃபேஸ்புக் ஜியோவில் முதலீடு செய்து இருப்பதால் ரிலையன்ஸ் நிறுவனம் கடன் இல்லாத நிறுவனமாக மாறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது என தெரியவந்துள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான முகேஷ் அம்பானி சமீபத்தில் தனது நிறுவனத்தை கடன் இல்லா நிறுவனமாக மாற்றுவதே தனது ஒரு இலக்கு என முன்பு தெரிவித்திருந்தார். அதற்கேற்றார்போல் ஃபேஸ்புக் நிறுவனம் ரிலையன்சின் தொலைத் தொடர்புநிறுவனமான ஜியோவில் 9.9 சதவீதம் பங்குகளை ரூபாய் 43,574 கோடிக்கு கொடுப்பதாக அறிவித்தது. பேஸ்புக் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் உயர்வதற்கு காரணமாக இருந்தது.
இதனால் அலிபாபா நிறுவனத்தின் தலைவரான ஜாக் மாவை பின்தள்ளி ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற இடத்தை முகேஷ் அம்பானி பிடித்தார். இந்நிலையில் பேஸ்புக் நிறுவனம் செய்த இந்த முதலீடு 2021 ஆம் ஆண்டுக்குள் ரிலையன்ஸ் நிறுவனத்தை கடன் இல்லாத நிறுவனமாக மாற்றும் என கிரெடிட் சூயிஸ் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுமட்டுமின்றி ஃபேஸ்புக் நிறுவனத்தின் தொழில்நுட்ப வசதிகளையும் ரிலையன்ஸ் நிறுவனம் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இதனால் ரிலையன்ஸ் நிறுவனம் மிக சுலபமாக இந்தியாவின் 120 கோடி மக்களை சென்றடையும் வாய்ப்பை பெற்றுள்ளது. இணையவழி மளிகை பொருட்களை விற்கும் தளமான ரிலையன்ஸ் ஜியோ தனது சேவையை சமீபத்தில் வாட்ஸ்அப் செயலி உடன் இணைத்து விரிவுபடுத்தியது. அதேபோன்று காணொலி அழைப்பு வசதிகளையும், பல வி.ஆர். சாதனங்களையும் (மெய்நிகர் சாதனங்கள்) ஃபேஸ்புக் நிறுவனம் வழங்கியுள்ளது. தற்போது அதற்கு தேவைப்படும் டேட்டாவை மக்கள் ஜியோவில் இருந்து பெற்றுகொள்ளலாம்