தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றால் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்றும் அவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும் தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தது. ஆனால் இதுவரை பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் மற்றும் சம்பள உயர்வு தொடர்பான எந்த அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிடாததால் பகுதிநேர ஆசிரியர்கள் சங்கம் தொடர்ந்து தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுமாறு கோரிக்கை விடுத்து வருகிறது. கடந்த 10 வருடங்களாக அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவோம் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில் தற்போது பொங்கல் பண்டிகை வருவதால் பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம், சம்பள உயர்வு, போனஸ் தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும் என பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செந்தில் குமார் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். மேலும் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்று 19 மாதங்கள் ஆகியும் இதுவரை தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. எனவே இனியாவது இந்த அறிவிப்பை வெளியிடுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.