அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பிரித்தானிய மகாராணியாரின் நடத்தையும், தனித்துவமும் தனது தாயாரை நினைவுபடுத்தியதாக ஊடகங்களில் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
ஜி-7 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரித்தானியாவிற்கு வருகை தந்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், அவருடைய மனைவி ஜில்-ம் வின்ட்சர் கோட்டையில் வைத்து பிரித்தானிய மகாராணியை நேரில் சந்தித்து பேசியுள்ளனர். அந்த சந்திப்பில் இருவரும் முதல் முறையாக உலக நடப்புகள் குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மகாராணியாருடனான இந்த சந்திப்பிற்கு பிறகு ஊடகங்களிடம் பேசிய போது கூறியிருப்பது யாதெனில், பிரித்தானிய மகாராணியின் நடத்தையும் தனித்தன்மையும் தனது தாயாரை நினைவுபடுத்தியதாகவும், எனது இந்த கருத்து மகாராணியாரை அவமதிப்பதாக இருக்காது என்று தான் கருதுவதாகவும் கூறியுள்ளார்.
அது மட்டுமல்லாமல் வெள்ளை மாளிகைக்கு ஒரு முறை வந்து செல்லுமாறு மகாராணியாருக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி பைடன் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின் போது மகாராணியார் சீன ஜனாதிபதி ஜின்பிங் பற்றியும், ரஷ்ய ஜனாதிபதி புடின் பற்றியும் அதிகமாக தெரிந்து கொள்ள ஆசைப்பட்டதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார். பிரித்தானிய மகாராணியாரை 13-வதாக சந்திக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஆவார். மேலும் முதன் முதலாக பிரித்தானிய மகாராணியார் ஆட்சியில் இருக்கும் அமெரிக்க ஜனாதிபதிகளில் ஒருவரை சந்திக்கும்போது ஜோ பைடன் எட்டு வயது சிறுவனாக இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.