ஜமைக்காவைச் சேர்ந்த இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கடந்த இரண்டு சீசன்களாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிவருகிறார். ஐபிஎல் தொடரில் தனது மிரட்டலான பந்துவீச்சின்மூலம் பல டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை திணறடித்தார்.
அதன்பலனாக கடந்த ஆண்டு ஐயர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடர், உலகக் கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம்பிடித்தார். ஆர்ச்சரின் வருகையில் வேகப்பந்துவீச்சில் பலமடைந்த இங்கிலாந்து அணி உலகக் கோப்பை வென்றது என்றும் கூறலாம். இதைத்தொடர்ந்து, ஆஷஸ் டெஸ்ட் தொடர் மூலம் இங்கிலாந்து அணியின் தவிர்க்க முடியாத வீரராகவும் அவர் வலம்வருகிறார்.
இந்த நிலையில், தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என்ற கணக்கில் வென்றது. இதனிடையே செஞ்சுரியனில் நடைபெற்ற இந்தத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆர்ச்சர் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்திருந்தார்.
அதன்பின் பயிற்சின்போது அவரது வலது முழங்கையில் காயம் ஏற்பட்டதால் அடுத்த மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடாமல் இருந்தார். இந்நிலையில், காயத்திலிருந்து மீண்டு அவர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
BREAKING: Jofra Archer has been ruled out of England's tour to Sri Lanka, as well as this year's IPL, having been diagnosed with a stress fracture of his elbow. pic.twitter.com/lReL6WuS0w
— ICC (@ICC) February 6, 2020
ஆனால், இங்கிலாந்தில் நேற்று அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது அவருக்கு முழங்கையில் முறிவு ஏற்பட்டது தெரியவந்தது. இதனால் அவர் இங்கிலாந்து அணி அடுத்து விளையாடவிருக்கும் இலங்கை அணிக்கு எதிரான தொடரிலும் அதன்பின் ஐபிஎல் தொடரிலிருந்தும் விலகுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, ஆர்ச்சர் கூடிய விரைவில் காயத்திலிருந்து மீண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என்ற நம்பிக்கை இருப்பதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ட்வீட் செய்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 21 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் இதுவரை 26 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
We’re working with the ECB to help @JofraArcher secure a speedy recovery, and still hope to see him in a Royals jersey this season.#RoyalsFamily pic.twitter.com/zZB6WFsQ5y
— Rajasthan Royals (@rajasthanroyals) February 6, 2020
அதேபோல இங்கிலாந்து அணிக்காக ஏழு டெஸ்ட் போட்டிகளில் 30 விக்கெட்டுகளும், 14 ஒருநாள் போட்டிகளில் 23 விக்கெட்டுகளும், ஒரு டி20 போட்டியில் விளையாடி இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.