தஞ்சாவூர் அருகே சிறுவன் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை அருகே, அடையாளம் தெரியாத சிறுவனின் உடல் மண்ணிற்குள் புதைந்து கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பின் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
விசாரணையில் புதைக்கப்பட்ட சிறுவன் தஞ்சாவூர் பாப்பா நகர் பகுதியைச் சேர்ந்தவன் என்பது கண்டறியப்பட்டது.மேலும் கடந்த 2017ஆம் ஆண்டு விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது சிறுவன் மாயமாகியுள்ளார் என்ற தகவலும் கிடைத்துள்ளது.மேலும் தொடரப்பட்ட தீவிர விசாரணையில் சிறுவனை அதே பகுதியைச் சேர்ந்த அரவிந்த் என்னும் இளைஞர் கொன்று புதைத்து உள்ளார் என்று தெரியவந்துள்ளது .
இதனையடுத்து குற்றவாளி கைது செய்யப்பட்டு தஞ்சை கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கு தஞ்சை கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜெய் ஆனந்த் முன்னிலையில் நடைபெற்றது. வழக்கினை விசாரித்த நீதிபதி குற்றம் சுமத்தப்பட்ட வாலிபருக்கு ஆயுள் தண்டனை வழங்கியதோடு, கூடுதலாக 7 ஆண்டு கால சிறை தண்டனையும் ரூபாய் 20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.