முதியவரை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு கொலை செய்ய முயன்ற வழக்கில் கைதானவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை எடைக்கல் காலனியில் கந்தன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசித்து வரும் குமார் என்பவரது வீட்டின் மீது விழுந்த மரத்தை வெட்டி அகற்றும் பணியில் கடந்த 2014ஆம் ஆண்டு ஈடுபட்டுள்ளார். அந்த சமயத்தில் குமாரின் வீட்டில் பக்கத்து வீட்டில் வசித்து வரும் பாண்டியன், அவரது மனைவி தவமணி, மகன்கள் நமச்சிவாயம் மற்றும் நித்தியானந்தம் போன்றோர் அந்த மரத்தை வெட்டக்கூடாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதோடு அவரின் ஜாதி பெயரை சொல்லி திட்டியதோடு, அவரை கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த கந்தனை மீட்டு அருகிலிருந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
இது குறித்து காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் எஸ்.சி, எஸ்.டி மற்றும் கொலை முயற்சி போன்ற பிரிவுகளின் கீழ் பாண்டியன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்து விட்டனர். இந்த வழக்கானது விழுப்புரம் எஸ்.சி, எஸ்.டி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எழில் இந்த வழக்கில் குற்றவாளிகளான பாண்டியன் மற்றும் நமச்சிவாயத்திற்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், பாண்டியனுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், நமச்சிவாயத்திற்குக்கு 2,000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதனையடுத்து தவமணிக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், அவரது மகன் நித்யானந்தாவிற்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.