மே 20ம் தேதிக்குப் பிறகு போக்குவரத்தில் படிப்படியாக மாற்றம் கொண்டு வரப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் படிப்படியாக தளர்வுகளை அறிவித்து சிறு குறு வியாபாரிகள் நடத்தக்கூடிய தனிகடைகள் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டு திறக்கப்படுகின்றன.
இருப்பினும் சிவப்பு மண்டலமாக இருக்கக்கூடிய அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து வசதி என்பது முற்றிலும் தடைபட்டுள்ளது. அதேபோல் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்ற மாவட்டத்திற்கோ அல்லது ஒரு மாநிலத்திலிருந்து வேறொரு மாநிலத்திற்கோ செல்வதற்கான போக்குவரத்து வசதிகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. அதேபோல் மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களான திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள் உள்ளிட்டவையும், சுபநிகழ்ச்சிகளுக்கு பயன்படும் திருமண மண்டபங்கள் உள்ளிட்டவையும் இக்காலகட்டத்தில் மூடப்பட்டுள்ளன.
தற்போது இவை அனைத்தையும் செயல்பட வைப்பது குறித்து மத்திய அரசு ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மே 20ம் தேதிக்குப் பிறகு சாலை, ரயில் மற்றும் விமான போக்குவரத்து வசதிகள் படிப்படியாக செயல்பட தொடங்கும் எனவும், ஜூன் 1-ம் தேதிக்குப் பிறகு வணிக வளாகங்கள், ஷாப்பிங் மால்கள், திருமண மண்டபங்கள் , திரை அரங்குகள் உள்ளிட்டவை நோயின் தாக்கம் உணர்ந்து கட்டுப்பாடுகளுடன் திறக்க அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.