Categories
பேட்மிண்டன் விளையாட்டு

வெறும் 32 நிமிடம்…. காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறிய ஸ்பெயின் வீராங்கனை …!!

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

இந்த ஆண்டுக்கான தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் பாங்காக்கில் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்று ஆட்டத்தில், ஒலிம்பிக் சாம்பியனும் ஸ்பெயினின் நட்சத்திர வீராங்கனையுமான கரோலினா மரின் – தாய்லாந்தின் பார்ன்பாவே சொச்சுவாங்குடன் மோதினார்.

இதில், ஆதிக்கம் செலுத்திய கரோலினா மரின் 21-11, 21-9 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். தனது சிறப்பான ஆட்டத்தால் கரோலினா மரின் இப்போட்டியில் 32 நிமிடங்களிலேயே வெற்றிபெற்றார். இதைத்தொடர்ந்து, நாளை நடைபெறும் காலிறுதிச் சுற்றில் அவர் ஜப்பானின் சயகா தகாஹஷியுடன் மோதவுள்ளார்.

இதேபோல் நடைபெற்ற மற்றொரு இரண்டாம் சுற்று போட்டியில் ஜப்பானின்அகானே யமகுச்சி 21-19, 21-10 என்ற நேர் செட் கணக்கில் தாய்லாந்தின் பிட்டயபான் சைவானை வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்குள் நுழைந்தார்.

முன்னதாக, இந்தத் தொடரின் முதல் சுற்று ஆட்டத்திலேயே இந்தியாவின் சாய்னா நேவால், கிதாம்பி ஸ்ரீகாந்த், சமீர் வர்மா, ஹெச்.எஸ். பிரனாய் ஆகியோர் வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |