திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகேயுள்ள மேல்மதலம்பேடு மேல் காலனிப் பகுதியைச் சேர்ந்த ராஜலட்சுமிக்கும், ரெட்டேரி பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவருக்கும் கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. நாகராஜ், தனது மனைவி வீட்டிலேயே தங்கி பெயிண்டர் வேலை செய்துவந்துள்ளார். நாகராஜ் வழக்கம் போல் இன்று வேலைக்குச் சென்றுள்ளார். கணவர் வேலைக்குச் சென்ற பின் வீட்டில் யாரும் இல்லாத நேரமாக ராஜலட்சுமி தனது அறையில் தூக்குப் போட்டுள்ளார். ராஜலட்சுமியை காணவில்லை என்பதால், அவருடைய தம்பி ராஜலட்சுமி அறைக்குச் சென்று பார்த்துள்ளார்.
அப்போது ராஜலட்சுமி தூக்கில் தொங்கி இருப்பதைக் கண்டு அதிர்ந்த அவர் அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்து கவரப்பேட்டை காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். தகவலறிந்து விரைந்து வந்த காவல் துறையினர் ராஜலட்சுமியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் ராஜலட்சுமியின் தற்கொலைக்கு குடும்பத் தகராறு காரணமா அல்லது வேறு ஏதேனும் பிரச்னையா போன்ற கேள்விகளோடு ராஜலட்சுமியின் கணவர் நாகராஜ், அவரின் தாயார் ஆகியோரிடம் காவல் துறையினரும், வருவாய் கோட்டாட்சியர் நந்தகுமாரும் தீவிரமாக விசாரணை செய்துவருகின்றனர்.