மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டில்லியில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் 1 வருடத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் பிரதமர் மோடி அவர்கள் இந்த 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து 7 ஆண்டுகளாக தான் எடுத்த எந்த ஒரு முடிவில் இருந்து பின் வாங்காத பிரதமர் மோடி விவசாயிகளின் தொடர் போராட்டத்தால் விவசாய சட்டத்தை திரும்ப பெற்றுள்ளார். இது டெல்லி எல்லையில் போராடி வந்த விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
பிரதமர் மோடியின் இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மட்டுமல்லாமல், நடிகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 3 விவசாய சட்டங்களை திரும்பப் பெறுவதாக நம் பிரதமர் அறிவித்திருப்பது தங்கள் உயிரை ஈந்து போராடிய எளிய வேளாண் மக்களின் ஒரு வருட இடை விடாத போராட்டத்திற்கு கிடைத்திருக்கும் வரலாற்று வெற்றி. போராடியவர்களுக்கும் புரிந்துகொண்ட அரசுக்கும் அன்பும், நன்றியும் என்று பதிவிட்டுள்ளார்.