தமிழகத்தில் இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தை தமிழக முதல்வர் இன்று தொடங்கி வைத்தார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடி இருந்தாலும், மாணவர்களின் கல்வித்திறனில் எந்த குறைபாடும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற நோக்கத்துடன் இந்த திட்டம் செயல்படுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டமானது முதன்முதலில் கடலூர், திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, விழுப்புரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் செயல்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கற்றல் குறைபாட்டை போக்க வேண்டும் என்பதற்காக இந்த இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தை இன்று விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்துள்ள முதலியார் குப்பம் பகுதியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது: மிகப்பெரிய கல்விப்புரட்சி இன்று தொடங்கப்பட்டுள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டது மாணவர்கள்தான். மாணவர்களிடையே படிப்பில் ஆர்வம் குறைந்து விட்டது. அதற்கு காரணம் கொரோனா. நடந்தது நடந்ததாக இருக்கட்டும், இனி நடப்பது நல்லதாக இருக்கட்டும் என்று கூறினார்.