தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள்.
ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஏப்ரல் 10 முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் கண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் தமிழகம் முழுவதும் நாளை நள்ளிரவு முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன.
இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் 2,327 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 வயதுக்குட்பட்ட 1258 ஆண், 1069 பெண் குழந்தைகளுக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. கொரோனா இரண்டாம் அலை குழந்தைகளை அதிகம் பாதிப்பதால் அவர்களை வெளியில் அழைத்துச் செல்ல வேண்டாம். துரித உணவுகள் வாங்கித் தருவதை தவிர்க்கவும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.