வீட்டில் இருக்கைக்கு அடியில் ராஜநாகம் பதுங்கியிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் இருக்கும் கொல்லம் மாவட்டம் ஆரியங்காவு கிராமத்தில் வசித்து வரும் மகேந்திரன் என்பவரது வீடு மலையடிவாரத்தில் இருக்கின்றது. இவர் நேற்று தூங்குவதற்காக அனைத்தும் தயார் செய்து கொண்டிருந்த நிலையில் அருகிலிருந்த இருக்கையின் அடியில் ஏதோ நெளிவது போல் பார்த்துள்ளார். இதனைத் தொடர்ந்து உடனடியாக டார்ச்லைட் என்னவென்று பார்த்தபோது அது 14 அடி நீளமுடைய ராஜநாகம் என்பது தெரியவந்துள்ளது.
இதனால் மிகுந்த அதிர்ச்சியில் உறைந்து போன அவர் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து விரைந்து வந்த அவர்கள் பாம்பை ஜாக்கிரதையாக பிடிக்க வேண்டுமென்பதால், பாம்பு பிடிப்பதில் பிரபலமான வாவா சுரேஷ் என்பவரை வரவழைத்து மிகவும் சாதுரியமாக அந்த ராஜநாகத்தை பிடித்து வனப்பகுதியில் விட்டுள்ளனர். குடியிருப்புகள் வனப் பகுதிகளை ஆக்கிரமித்து வருவதால் இது போன்ற அரியவகை உயிரினங்கள் ஊருக்குள் வந்து விடுவதாக கூறப்படுகிறது.