இந்தியன் -2 படப்பிடிப்பு விபத்தில் பலியான , காயமடைந்தவர்களுக்கு நிவாரணமாக லைக்கா நிறுவனம் ரூ 2 கோடி அறிவித்துள்ளது.
நடிகர் கமல், இயக்குனர் ஷங்கர் இணைந்துள்ள இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கமல் 90 வயது, இந்தியன் தாத்தாவாக நடிக்கிறார். 85 வயது கதாபாத்திரத்தில் கமலின் தோழியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, வெண்ணிலா கிஷோர், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
இந்த படத்தின் ஷூட்டிங் சென்னை பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் பிப்.,7ஆம் தேதி முதல் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு இவிபி பிலிம் சிட்டியில் கடந்த சில தினங்களாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் செட் அமைக்கும் பணியின் போது எதிர்பாராத விதமாக, ஸ்டுடியோ லைட் வைக்கப்பட்டிருந்த ராட்சத கிரேன் அறுந்து விழுந்தது. பல அடி உயரத்தில் இருந்து விழுந்த ராட்சத கிரேனில் சிக்கி, 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதில் உதவி இயக்குனர் கிருஷ்ணா,மது மற்றும் சந்திரன் ஆகியோர் இந்த விபத்தில் பலியாகினர். மேலும் 9 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்திற்கு திரையுலகினர் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு லைக்கா நிறுவனம் சார்பில் நேரில் அஞ்சலி சென்று அஞ்சலி செலுத்திய சு.பாஸ்கரன் , காயமடைந்தவர்களுக்கு 50 லட்சம் வழங்கப்படும் என தெரிவித்தார். அதே போல உயிரிழந்த 3 பேரின் குடும்பத்துக்கு தலா 50 லட்சம் நிதியுதவி லைக்கா நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னதாக நடிகர் கமல்ஹாசன் உயிரிழந்தவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களை சந்தித்த போது தன் சார்பில் ரூ 1 கோடி அறிவித்து குறிப்பிடத்தக்கது.