Categories
கிரிக்கெட் விளையாட்டு

”வெறும் ஒரு செட் ஷூ மட்டும் தான்” கையில இருந்துச்சு… பும்ரா உருக்கம் …!!

சிறு வயதில் பயிற்சிமேற்கொள்ளும்போது தன்னிடம் ஒரு செட் ஷூ மட்டுமே இருந்ததாக இந்திய அணியின் பந்துவீச்சாளர் பும்ரா உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட்டில் மலிங்காவிற்கு அடுத்தப்படியாக யார்க்கர் கிங்காக வலம்வருபவர் இந்திய பந்துவீச்சாளர் பும்ரா. வித்தியாசமான பவுலிங் ஆக்‌ஷன், துல்லியமான யார்க்கர், ஸ்லோயர் பந்துகள் என பந்துவீச்சில் பல வெரைட்டிகளைத் தன் கையில் வைத்திருப்பார். ஐபிஎல் கிரிக்கெட்டில் கிடைத்த நல்ல அறிமுகத்தின் மூலம், 2016 ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.

மூன்றே வருடங்களில் தற்போது உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக வளர்ந்துள்ளார். தனது மிரட்டலான பந்துவீச்சின் மூலம், நட்சத்திர பேட்ஸ்மேன்களையும் திணறிடிக்கும் திறன் பெற்றவர். கடந்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான பும்ரா விளையாடிய 12 போட்டிகளிலேயே டெஸ்ட் தரவரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். ஒருநாள் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார்.

விளையாட்டில் தற்போது சிறந்த வீரராக திகழும் பலரும் அவர்களது ஆரம்ப காலத்தில் வருமையான வாழ்க்கையைதான் வாழ்ந்திருப்பார்கள். அந்தவகையில், பும்ராவின் கதையும் அப்படிதான் அமைந்திருந்தது. லண்டனில் விளையாட்டுத் துறை சார்ந்த விழாவில் மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் நீடா அம்பானி பங்கேற்றார். அதில், நீடா அம்பானி பேசுகையில், திறமையானவர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் வந்து அவர்கள் வாழ்வில் நிச்சயம் வெற்றி அடைவார்கள் என்று கூறி, பும்ரா குறித்த வீடியோவை வெளியிட்டார்.

அந்த வீடியோவின் தொடக்கத்தில் பும்ராவின் தாயார் தல்ஜித் பும்ரா கூறுகையில், பும்ரா ஐந்து வயதாக இருந்தபோது நான் எனது கணவனை இழந்துவிட்டேன் என்றார். அதன்பின் பும்ரா நினைவுகூறுகையில், ‘எனது தந்தை இறந்தபிறகு நாங்கள் மிகவும் வருமையில் இருந்தோம். கிரிக்கெட்டில் பயிற்சி மேற்கொள்ள என்னிடம் ஒரு செட் ஷூவும், இரண்டு டீ-சர்ட் மட்டுமே இருந்தது. இதனால், தினமும் அதை பயன்படுத்த வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு நாள் பயிற்சி முடிந்தவுடனும் நான் எனது ஷூவையும், டீ-சர்ட்டையும் துவைத்து வைப்பேன்.

திறமையுடன் ஏழ்மையில் சிரமப்படும் வீரர்களுக்கு பெரிய அளவிலான வாய்ப்புகள் கிடைக்கும் போன்ற கதைகளை நாம் சிறு வயதில் கேட்டிருப்போம். அப்படிதான் எனது வாழ்விலும் நடந்தது என நினைவுகூர்ந்தார். பின் அவரது தயார், நான் எனது மகனை முதல்முறை ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடுவதை டிவியில் பார்த்தபோது என்னால் அழுகையை நிறுத்த முடியவில்லை’ என உருக்கமாகத் தெரிவித்தார்.மேலும், இதுபோன்ற கடினமான நாட்களை நாம் வாழ்க்கையில் கடந்துவந்தால், அந்த நாட்கள் நம்மை நிச்சயம் வலிமையாக்கும் என்று பும்ரா குறிப்பிட்டதுடன் அந்த வீடியோ நிறைவடைந்தது.

Categories

Tech |