அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, “விடியலை நோக்கி – ஸ்டாலினின் குரல்” என்ற தேர்தல் பரப்புரை பயணத்தை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி மேற்கொண்டு வருகிறார். பரப்புரை பயணத்தின் முதல் இரண்டு நாள்கள் காவல் துறையினர் அவரை கைது செய்து, பின்னர் மாலை விடுவித்தது. இந்நிலையில், உதயநிதி மூன்றாம் நாளான இன்று (நவம்பர் 22) மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு பகுதியில் தனது பரப்புரையை தொடங்கி, குத்தாலம் வந்தடைந்தார்.
அங்கு, பரப்புரையில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலினை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி, “காவல் துறையினர் தடை விதித்து, கைது செய்வதால் திமுகவின் பரப்புரை பயணம் வெற்றி அடைந்துள்ளது. திமுகவின் பரப்புரைப் பயணத்தில் அதிகம் கூட்டம் கூடுவதாக அரசு தடை விதிக்கிறது. சென்னையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்ற அரசு விழாவில் கூட்டம் கூடியபோது கரோனா பரவாதா? அதிமுகவுக்கு ஒரு நீதி, மற்ற கட்சிகளுக்கு ஒரு நீதி என காவல்துறை செயல்படுகிறது.
நாகை மாவட்டம் கள்ளிமேடு பகுதியில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் காரணமாக 2,500 ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் என்னிடம் தெரிவித்தனர். ஆனால் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், அதை இல்லை என்று மறுக்கிறார். யார் சொல்வது உண்மை என்று உங்களுக்கே தெரியும்.
மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு எதிராக செயல்படுகின்றன. அதிமுக அரசு வேளாண் மசோதாவை ஆதரித்து கையெழுத்திட்டுள்ளது. பாஜக அரசு விவசாயத்தை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதிமுக அரசு அதற்கு துணை போகிறது” என குற்றஞ்சாட்டினார்.
மேலும், தொடர்ந்து தனது பரப்புரை பயணத்திற்கு அரசு தடை விதிப்பதை எதிர்த்து நீதிமன்றத்தை நாடலாம் என ஆலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.