அனைத்து வகுப்புகளிலும் புகார் எண்கள் குறித்து ஒட்டப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களால் பாலியல் தொல்லைக்கு ஆளாகும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இதனால் சில மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக பள்ளிக் கல்வித் துறை சார்பில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் பள்ளிகளில் அனைத்து வகுப்பறைகளிலும் 1098 மற்றும் 14417 ஆகிய உதவி எண்கள் குறித்து ஒட்டப்படும் என்றும், பாலியல் தொந்தரவுகள் தொடர்பாக மாணவர்கள் புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புகார் அளிக்கும் மாணவர்களின் ரகசியம் கட்டாயம் பாதுகாக்கப்படும். மாணவர்கள் தைரியமாக முன்வந்து புகார் அளிக்க வேண்டும், தவறுதலாக எந்த முடிவையும் எடுக்கக் கூடாது என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தியுள்ளார்.