திருப்பூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் முக ஸ்டாலின் அங்கு நலத்திட்ட உதவிகளை தொடங்கிவைத்தார். இதைத்தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் அவர் பேசிவருகிறார். அதில்,” திருப்பூருக்கு எத்தனையோ பெருமைகள் உண்டு. அண்ணா, பெரியார் என இரு பெரும் தலைவர்கள் முதல் முறையாக சந்தித்துக்கொண்ட திருப்பூரில் அரசு விழாவில் கலந்து கொண்டதில் பெருமை அடைகிறேன். திமுக ஆட்சி அமைந்த போது இது ஒரு கட்சியின் ஆட்சியாக இருக்காது, ஒரு இனத்தின் அதாவது தமிழகத்தின் ஆட்சியாக இருக்கும் என தெரிவித்தேன். அதேபோல் தமிழினத்தின் வளர்ச்சிக்காக உழைத்துக் கொண்டிருக்கிறோம்.
திமுக ஆட்சி என்றாலே உள்ளாட்சியில் நல்லாட்சி என்ற பெயர் எடுத்தோம். கடந்த ஆட்சியில் என்ன நடந்தது என்பதை நான் பேச விரும்பவில்லை. இங்கு அரசியலும் செய்ய விரும்பவில்லை. அதற்கு வேறு மேடைகள் உள்ளது. ஆட்சிக்கு வந்து ஆறு மாதம் தான் ஆகிறது. அதற்குள் நாங்கள் பல நலத்திட்டங்களை செய்துள்ளோம். இன்னும் நான்கரை ஆண்டுகள் உள்ளது. அதில் என்னென்ன செய்வோம் என்பதை எண்ணிப்பாருங்கள். ஐந்து மாதம் அல்ல ஐந்து ஆண்டு காலமும் இதே போல் தான் நாங்கள் பணி செய்வோம்” என்று அவர் பேசி வருகிறார்.