நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கேரளாவில் கொரோனாவால் கட்டுப்படுத்தும் நோக்கில் இன்றும் நாளையும் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. முழு ஊரடங்கில் அரசு மற்றும் தனியார் பேருந்து சேவை முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மதுக்கடைகள், வணிக நிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் இயங்காது. உணவகங்களில் ஆன்லைன் பார்சல் சேவை அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் ஊரடங்கிலிருந்து அம்மாநில அரசு விலக்கு அளித்துள்ளது.