வரும் ஊரடங்கு தளர்வு ஆலோசனை கூட்டத்தில் ஒமைக்ரான் குறித்து ஆலோசனை செய்யப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார் .
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை தாக்கம் குறைந்ததை தொடர்ந்து ஊரடங்கிலிருந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா நாட்டில் உருமாறிய தொற்று தனது புது அவதாரத்தை எடுத்துள்ளது. இந்த வைரசுக்கு ஒமைக்ரான் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் முதன் முதலாக இந்த தொற்று கால்பதித்தது. தற்போது குஜராத், மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய மாநிலங்களில் பரவி வருகிறது.
இதுவரை இந்தியாவில் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் பாதிப்பு அதிகம் இருப்பதால் தமிழக அரசு கவனமுடன் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ள காரணத்தினால் கடும் கட்டுப்பாடுகளை அமல்படுத்த அரசு அதிகாரிகள் பரிசீலனை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கு தளர்வு ஆலோசனை கூட்டத்தில் ஒமைக்ரான் குறித்து ஆலோசனை செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக சுகாதாரத் துறையில் இருந்து பள்ளி கல்வித்துறைக்கு அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வரவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.