தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து வங்கக்கடலில் உருவாகிய 2 காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கியது. கடந்த மாதம் 25ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழையின் மூலம் தற்போது வரை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இயல்பை விட கூடுதலாக மழை பதிவாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் நீர்நிலைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வழிகின்றன. அதனால் பல மாவட்டங்களில் வெள்ள பாதிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து இலங்கையை கடந்து தென் தமிழகத்தை நோக்கி நகரும் என்று கணித்துள்ளது. அதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாற வாய்ப்பில்லை என சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.