தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கன வாக்கு எண்ணிக்கை பிப்.22 காலை 8 மணி அளவில் தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக 42.99 சதவீதம் வாக்குகளை பெற்று முதலிடத்தை பிடித்தது.
இதையடுத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் செலவு கணக்கை தாக்கல் செய்யாதவர்கள் 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும் எனவும் மாநில தேர்தல் ஆணையம் எச்சரித்தது. இந்நிலையில் மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தல் 04/03/2022 (நாளை) நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் கும்பகோணம் மாநகராட்சி மேயர் பதவி காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று திமுக அறிவித்துள்ளது.