கோயம்பேடு சந்தையில் தக்காளி லாரிகளை நிறுத்த இடம் அளித்தும் விலை குறையவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தக்காளி விலையால் கோயம்பேடு சந்தையில் லாரிகளை நிறுத்துவதற்கு அனுமதி வேண்டி தக்காளி வியாபாரிகள் சங்கத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இதைத்தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றமும் லாரிகளை நிறுத்துவதற்கு அனுமதி வழங்கியது. தக்காளி லாரிகளை நிறுத்த இடம் ஒதுக்கி பிறப்பித்த உத்தரவு பொங்கல் பண்டிகை வரை நீட்டிக்கப்பட்டது.
இருப்பினும் கோயம்பேடு சந்தையில் லாரி நிறுத்த இடமளித்தும் பெருமளவில் விலை குறையவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது . இதற்கு பதிலளித்த வியாபாரிகள் சங்கம் கனமழையால் தென்மாநிலங்களில் விளைச்சல் இல்லை என்றும், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து வரும் தக்காளிகளின் வரத்து குறைந்துள்ளதால் இந்த விலை உயர்வு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.