திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது பட்ஜெட் இது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திமுக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது தலைமைச் செயலகத்தில் 2022-2023 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிதியாண்டுக்கான காகிதமில்லா தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இரண்டாவது முறையாக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேரவையில் தாக்கல் செய்தார்.
இந்நிலையில் பட்ஜெட் குறித்து பேசத் தொடங்கிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதன்படி ஜிஎஸ்டி இழப்பீடு நடைமுறை முடிவுக்கு வந்தபின் 20,000 கோடி வரை தமிழகம் வரி இழப்பை சந்திக்கும் என அமைச்சர் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மாநில அரசின் வரி வருவாயில் 10 சதவீதம் பங்கை தமிழகம் வகிக்கும் நிலையில், அதற்குரிய நிதி நமக்கு கிடைப்பதில்லை. ஜிஎஸ்டி என்ற நடைமுறையை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார்.