திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் தனியார் நர்சிங் கல்லூரி மாணவ மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி சாலையிலுள்ள முத்தனம்பட்டியில் இயங்கிவரும் தனியார் நர்சிங் கல்லூரியின் தாளாளர் ஜோதிமுருகன். இவர் அக்கல்லூரியில் விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்து வந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த 20ம் தேதி கல்லூரியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் திடீரென்று திண்டுக்கல் பழனி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அங்கு வந்த திண்டுக்கல் மாவட்ட எஸ்பி சீனிவாசன் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ மாணவிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பிறகு அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் மற்றும் விடுதி காப்பாளர் அர்ச்சனா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. விடுதி காப்பாளர் அர்ச்சனாவை காவல்துறையினர் கைது செய்த நிலையில், கல்லூரி தாளாளர் ஜோதி முருகனை அவர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் பாலியல் புகாருக்கு உள்ளான நர்சிங் கல்லூரியை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்நிலையில் பாலியல் புகாரில் சிக்கிய தனியார் நர்சிங் கல்லூரி அரசே ஏற்று நடத்த வலியுறுத்தி திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நர்சிங் கல்லூரி மாணவ மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.