நீட் விலக்கு சட்டத்துக்கு உடனடியாக ஒப்புதல் வழங்கி குடியரசு தலைவருக்கு அனுப்பும்படி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநரை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். எனினும் மசோதா கிடப்பில் போட்டிருக்கிறது சமூக அநீதி என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நீட் விலக்கு சட்டத்துக்கு உடனடியாக ஒப்புதல் தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 2022-2023 ஆம் வருடம் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு வருகிற ஜூலை மாதம் நடைபெற உள்ளதாகவும் அதற்கான அறிவிக்கை ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியாகலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. அதன்பின் நீட் விலக்கு சட்டத்துக்கு ஆளுனரும், குடியரசுத் தலைவரும் ஒப்புதல் வழங்கும் விஷயத்தில் செய்யப்படும் ஒவ்வொரு மணிநேர தாமதமும் மாணவர்களுக்கு மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி விடக்கூடும். இதனிடையில் 2022-23 ஆம் வருடமும் நீட் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறும் என்ற சூழல் ஏற்பட்டால் அதற்கான பழியை அரசுதான் சுமக்க நேரிடும்.
இந்த அவசரத்தை தமிழ்நாடு அரசும் புரிந்துகொண்டு நீட் விலக்கு சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு அரசின் நடவடிக்கைகளுக்கு அனைத்து வகையிலும் ஒத்துழைக்க பாட்டாளி மக்கள் கட்சி தயாராக இருக்கிறது. தமிழ்நாடு ஆளுனரும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நீட் விலக்கு சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் தர வேண்டும்” என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.