ஆம்பூர் பிரியாணி கடையில் இரண்டு பிரியாணி வாங்கினால் அரை கிலோ தக்காளி இலவசம், ஒரு கிலோ தக்காளி கொடுத்தால் ஒரு பிரியாணி இலவசம் என்று அதிரடி சலுகை கொடுக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள சொத்துபாக்கத்தில் இயங்கிவரும் ஆம்பூர் பிரியாணி கடையில் இன்று ஒரு நாள் ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் முழு பிரியாணி இரண்டு வாங்கினால் அரை கிலோ தக்காளி இலவசம், அதேபோல் ஒரு கிலோ தக்காளி கொடுத்தால் பிரியாணி இலவசம் போன்ற சலுகையை அறிவித்து விற்பனை செய்து வருகிறது.
இந்த ஒருநாள் மட்டுமே இப்படி விற்பனை செய்யப்படும் என்று கடையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். மேலும் இயற்கை சீற்றத்தால் அழிந்து வரும் விவசாயத்தை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இதுபோன்று அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் தக்காளி விலை உயர்ந்து கொண்டே வருவதை அரசாங்கம் நடவடிக்கை எடுத்து விலை உயர்வை குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.