தொடர் மழையால் பாதிக்கப்பட்ட கட்டுமான தொழிலாளர் சங்க உறுப்பினர்களுக்கு 5 ஆயிரமும், மீனவர்களுக்கு ரூபாய் 5 ஆயிரமும் வழங்கப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. கடந்த 10 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அன்றாட பணி செய்து குடும்பத்தை நடத்தும் கூலித் தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர்கள், மீனவர்கள் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர்.
அதனால் கட்டுமான தொழிலாளர் சங்க உறுப்பினர்களுக்கு ரூபாய் 5 ஆயிரமும், மீனவர்களுக்கு ரூபாய் 5 ஆயிரமும் வழங்கப்படும் என புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். முன்னதாக மழையால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு தலா 25 ஆயிரமும், நெற்பயிருக்கு ஹெக்டேருக்கு ரூபாய் 20 ஆயிரம் வழங்கப்படும் என்று அவர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.