மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் கட்டுமான பணி தொடர்பான ஒப்பந்தப்புள்ளி தற்போது வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் மறைந்த திமுக தலைவருமான கருணாநிதியின் பெயரில் நூலகம் அமைக்க உள்ளதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 91-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் இளைஞர்களுக்கு புத்தகங்கள் மீதும், புத்தகங்களை வாசிப்பது மீதும் ஆர்வம் கொண்டு வரும் வகையில் மதுரையில் 70 கோடி ரூபாய் செலவில் கலைஞர் நினைவு நூலகம் ஒன்று அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்கு ஆகும் செலவு தொடர்பாக தற்போது தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. அதில் மதுரை தல்லாகுளம் பகுதியில் நூலகத்திற்கு இரண்டு ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்ட நிலையில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சார்பாக ரூபாய் 96.8 கோடி மதிப்பிற்கு ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது. ஒப்பந்தப்புள்ளிக்கு விண்ணப்பங்கள் நவம்பர் 30 முதல் டிசம்பர் 16 வரை விநியோகிக்கப்படுகிறது கட்டுமான பணியை 12 மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.