மாணவ, மாணவிகள் எந்த தயக்கமுமின்றி பாலியல் புகார்களை அளிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தொடர்ந்து பள்ளி ஆசிரியர்களால் மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாகி வருகின்றனர். இது தொடர்கதையாகி வருவதால் பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளதாவது: “மாணவ மாணவிகள் எந்தவித தயக்கமும் இல்லாமல் பாலியல் புகார்களை அளிக்க வேண்டும். மேலும் அவர்களின் விவரங்கள் கட்டாயம் பாதுகாக்கப்படும். போக்சோ சட்டம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு வகுப்பு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒரு ஆசிரியர் செய்யும் தவறால் மற்றவர்களும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது. புகார் தெரிவிக்க வேண்டிய எண்கள் குறித்து மாணவ மாணவியர்களுக்கு அறிவுறுத்த பள்ளிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவிகள் புகார் தெரிவிக்கும் பட்சத்தில் மாணவர்களின் பக்கம் அரசு துணை நிற்கும்” என அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.