தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று முடிவுகள் அறிவிப்பு. மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல், 268 மையங்களில் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 15 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, அறிவிக்கப்பட்டு வருகின்றது.
தமிழகத்தில் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணும் மையங்களில் 40 ஆயிரத்து 910 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை முடிந்தபின் பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க 60 ஆயிரம் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டவுள்ளனர். வாக்கு எண்ணிக்கை மையங்களில் 11 ஆயிரத்து 797 சிசிடிவி கேமராக்கள் கண்காணிக்கின்றன.
இந்த நிலையில் முதல் முறையாக மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட ஆவடியை திமுக கைப்பற்றியுள்ளது. இங்குள்ள 48 வார்டுகளில் திமுக 28, அதிமுக 2, சுயேட்சை -1 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில் ஆவடி மாநகராட்சி 14-வது வார்டில் போட்டியிட்டு வென்ற அதிமுக வேட்பாளர் ராஜேஷ்குமார், அமைச்சர் நாசர் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இதற்கு முன்பாக மதுரை மேலூர் நகராட்சியில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் அருண் சுந்தரபிரபு அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் திமுகவில் இணைந்தார் என்பது கவனிக்கத்தக்கது.