10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணை சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு பிறகு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடந்து வருகிறது. இதையடுத்து முதுநிலை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறந்து வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது மற்ற ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக நடத்தப்படுகிறது. இந்நிலையில் தற்போது பிரிட்டனில் பரவிய உருமாறிய கொரோனா தமிழகத்திலும் பரவி வருகிறது.
இது புதிய வைரசை விட வீரியமிக்க வைரஸ் என்று சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது என்று கேள்வி எழும்பி வருகின்றது. மேலும் இந்த கல்வியாண்டு பூஜ்ஜிய ஆண்டாக அறிவிக்கப்படுமா? என்றும் குழப்பம் நிலவி வந்தது. இதையடுத்து 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு கட்டாயம் நடைபெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
இந்நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த அட்டவணை சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு பிறகு வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார். பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வு எப்போது நடத்துவது? என்பது குறித்து முதல்வருடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்றார். மேலும் பள்ளி திறப்பு, பொதுத்தேர்வு குறித்து மருத்துவ குழுவினருடன் ஆலோசனை நடத்த முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.