கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கிய கொரோனா வைரஸ் 11 மாதம் ஆகியும் குறைந்தபாடில்லை. பல நாடுகளில் அதன் இரண்டாம் அலை பரவத் தொடங்கியுள்ளது. கொரோனா தொற்று கண்டறியப்பட்ட 11 மாதங்களில் உலக அளவிலேயே நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக 10,000த்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் கொரோனாவின் இரண்டாவது அலை தற்போது தொடங்கி விட்டதா என்று நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். அந்தவகையில் இந்தியாவிலும் இதன் தாக்கம் எதிரொலிக்கும் என்றெல்லாம் கேள்விகள் எழுந்துள்ளது. முதலில் கொரோனா பல நாடுகளில் அதிகரித்த பிறகு தான் இந்தியாவில் பரவியது. அதேபோல் இரண்டாம் அலை தற்போது பல நாடுகளில் பரவத் தொடங்கியுள்ளது. இதனால் இந்தியாவிலும் இதன் தாக்கம் இருக்குமோ என்ற அச்சம் மக்கள் மனதில் எழுந்துள்ளது.
தற்போதைய நிலையில் இந்தியாவில் டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா திடீரென அதிகரித்து வருவதால் அதன் இரண்டாம் அலை பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் டிசம்பர் 1ஆம் தேதிக்கு பிறகு நாடு முழுதும் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஆஸ்திரேலியாவில் இன்று முதல் 6 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில் மீண்டும் கொரோனா அதிகரித்துள்ளதால் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.